Friday, January 17, 2014

ரொமான்ஸ்

தமிழ் சீரியல்கள் குடும்ப சண்டையவே சுத்தி வந்து கொண்டிருக்க, ஹிந்தி டப்பிங் சீரியல்களில் ரொமான்ஸைக் களமிறக்கிச் சொல்லி அடிக்கிறார்கள்.....

பொதுவான மூணே விதிதான் 
1. கல்யாணமாகிப் பிரிந்தவர்கள் திரும்ப சேரக் காதலிக்க வேண்டும்
2. இரண்டு பேருக்குமே பிடிக்காமல் திருமணம் செய்து பிறகுக் காதலிக்க வேண்டும்.
3. ஜோடியில் யாராவது ஒருவருக்குப் பிடிக்காமல் திருமணம் செய்து, மற்றொருவர் காதலை பிழிய வேண்டும்...

மூணுலயுமே ரொமான்ஸ் தூக்கலாய் இருக்குமென்பதாலும், இதிலே முதலிலேயே திருமணம் ஆகிவிடுவதால் நாடகக் காதல் என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாதென்பதாலும், எல்லாருக்கும் பிடித்துப் போக TRB எகிறிக் கிடக்கிறது.....

இது ஆவறதில்லை

எங்கள் கீழ் வீட்டில் குடியிருந்த ஒரு அண்ணன் கம்ப்யூட்டரில் புலி. விண்டோஸ் தவிர எதுவும் பார்த்தறியாத நமக்கு முன்ன லினக்ஸ்ல படம் எல்லாம் போட்டுக்காட்டுவாரு....."கோழி குருடா இருந்தா என்னடா கோமுட்டி தலையா கொழம்பு ருசியா இருந்ததான்னு பாக்கணும்ன்னு" அண்ணன் கவுண்டமணி சொன்ன வகையில் விண்டோஸோ லினக்ஸோ படம் காட்டினால் போதும் என்று அவரை சுத்தி வருவேன்.... (இங்கே படம் என்பது விலையில்லா இன்டர்நெட்டைக் குறிக்கும்.... கில்மாவை அல்ல) சில சமயம் கேம் விளையாடக் குடுப்பார்....

Chip, Digit போன்ற கம்ப்யூட்டர் புஸ்தகமா படிச்சிட்டு அப்டேட்டாக இருப்பார்... 
நெட் சென்டருக்கு சென்று பாஸ்வோர்ட் திருடுவது போன்ற ஹேக்கிங் வேலையும் பார்ப்பார்....

 இன்டர்நெட்டில் புதுசாக எது வந்தாலும் அவர் மூலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது.... திரிஷாவின் குளியல் வீடியோ பற்றித் தெரிய வந்ததும் அப்படித்தான்..

அது 2004 ம் ஆண்டின் அந்திமக்கால மாதத்தின் ஒரு நாள்... ஒரு சனிக்கிழமை மாலை, காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மேலே போவதற்கு முன் கையசைத்துக் கூப்பிட்டார் அண்ணன்.... "விஷயம் தெரியுமா த்ரிஷா குளிக்கற வீடியோ நெட்ல வந்திருக்கு, டவுன்லோட் பண்ணிட்டேன்" 
எனக்கு நம்ப முடியவில்லை... ப்ளுடூத், பறக்கும் தும்பி மாதிரி கேமரா பற்றியெல்லாம் தலைவர் சுஜாதா எழுதியிருந்ததைப் படித்திருந்ததால், எப்படி எடுத்திருப்பார்கள் என்கிற கற்பனைப் பறக்க ஆரம்பித்திருந்தது...கடைசியில் சப்பையாக கதவு கைப்பிடியில் கேமரா வைத்து எடுத்தது அந்த இரண்டு நிமிட வீடியோவில் தெரிந்து கொண்ட சமாச்சாரம்....

பிளாப்பி டிஸ்க் என்பது இப்படிக் கண்ணெதிரிலேயே அழிந்து போகும் என்று கனவு கூட கண்டதில்லை நான்... விண்டோஸைக் கம்ப்யுட்டரில் பதியவே பிளாப்பி அவசிய வஸ்துவாக இருந்தது அப்போது... அப்படியொரு பிளாப்பியில் தான் அந்த வீடியோவைப் பதிவிறக்கம் செய்து கொண்டேன் நண்பர்களிடம் பரப்புவதற்கு.... வீடியோ அளவும் 3 mb ஆக இருந்ததால், அழகாகப் பிடித்துக் கொண்டது (floppy disk capacity 4 mb)...
தெருத் தெருவாக ஏரியா நண்பர்களுக்கு வீடியோவை சேர்த்தேன்...

அடுத்தது கல்லூரி நண்பர்கள்..... வெளியில் வீடெடுத்துத் தங்கியிருந்த பாய்ஸிடம் சென்று "மச்சி திரிஷா குளியல் வீடியோ பாக்கறீங்களா? நம்ம கைவசம் இருக்கு என்று கெத்தாகக் கூறினேன்.... அவர்கள் அசால்ட்டாக "எவ்ளோ நிமிஷம்" என்றார்கள்... "முழுசா ரெண்டு நிமிஷம் டா "..
ஹி ஹி ஹே என்று என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அவர்களின் கீழ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.... அங்கே ஒரு அண்ணன் இருந்தார்,,, எல்லா எடத்துலயும் இந்த கீழ் வீட்டு அண்ணன்கள் மட்டும் எப்படி அப்டேட்டாக இருக்கிறார்கள்?? 

ரெண்டு நிமிஷம் என்பது முழுசில்லை என்பதும் முழு வீடியோ 18 நிமிஷம் என்பதும் அங்கே காலம் எனக்கெடுத்தப் பாடம்....
அதன்பிறகு வீடியோ காலேஜ் முழுக்க பரவியதும், நாங்கள் அதைப் பற்றி விவாதித்ததும், சில பெண்கள் கூட அந்த வீடியோவை வாங்கி சென்றதாகக் கேள்விப்பட்டதும்(???), தமிழ்நாடே அதைப்பற்றிப் பேசியதும் ஊரறிந்தது.....

இப்போ எதுக்கு இந்தப் பதிவுன்னா, அப்படி ஊரே பார்த்துப் பேசி வெறுத்தோ, வேண்டாமென்றோ, தேவையில்லாதது என்றோ தூக்கி வீசிவிட்ட ஒன்றுக்காகத்தான் த்ரிஷாவின் அம்மாவுக்கு விசாரணைக்கான பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது 10 வருடத்திற்குப் பிறகு.....தீர்ப்பு சொல்ல இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம்...

15 வருடங்களுக்குப் பிறகு வீடியோவில் இருப்பது த்ரிஷாதான் எடுத்தது இவர்தான் என்று தீர்ப்பு சொன்னால் த்ரிஷாவுக்கு என்ன லாபம்??
அல்லது வீடியோ போலி என்று தீர்ப்பு கூறினால் நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் எவ்ளோ செலவு??

எதை எந்தளவுக்கு விசாரிக்கலாம் என்று கூடத் தெரியாத ஒரு நீதித் துறை... அதற்குத் துணையாக ஒரு காவல்துறை... இதற்கெல்லாம் மேலாக நாம்...

ம்ஹும் இது ஆவறதில்லை..,, 

Friday, November 8, 2013

ஏரோப்ளான்

என்னை அழவைத்துப் பார்த்த அனைத்தும், என் மனதுக்கு மிக நெருக்கமான பிடித்தமான ஒன்றாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.... அம்மா, அப்பா, அண்ணாமலையார், ஸ்கூல்,  நட்பு, அரியர், பியர், வேலை என்ற வரிசையில் விமானத்துக்கும் இடமிருக்கிறது....

கிராமத்தில் துவையல், ஊறுகாய், குழம்பு என்று பழகிய பையனை மொத நாள் காலேஜ் மெஸ்ஸுல உக்கார வச்சு சட்னி வேணுமா சாம்பார் வேணுமான்னு கேக்கற மாதிரி இருந்தது எனக்கு..... இடம்: சென்னை உள்நாட்டு (நல்லவேளை ) விமான நிலையம், எனது முதல் விமானப் பயணம்.....

எங்க அப்பா அம்மாகிட்ட "நீங்க சுத்தி அந்த பக்கமா வாங்க, நான் இந்த பக்கமா செக்கின் பண்ணிட்டு வந்து உங்கள பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நான், போர்டிங் முடிஞ்சு உள்ளே சென்றுவிட்டதுதான் காரணம். 
அங்க இருந்த ஒரு புத்தகக் கடை சேல்ஸ் கேர்ள் கிட்ட இங்க விசிட்டர்ஸ் லௌஞ்ச்க்கு எப்படி போகனும் என்று கேட்டதுக்கு, "சார் நீங்க போர்டிங் ஆகி உள்ள வந்துட்டீங்க. இனிமே வெளிய போக முடியாது" ன்னு சொல்லிச்சு. 
செக்கின் எது போர்டிங் எதுன்னே தெரியாம டாமி கூலர்ஸ், காதுல ஐ பாட் வேற....

போனா 3 மாசம் கழிச்சுதான் திரும்ப வர முடியும் என்கிற நிலைமையில், முதல் நாள் ஸ்கூலுக்கு குழந்தையை அனுப்பிட்டு காத்திருக்கும் மனநிலையில் வெளியே அம்மா..... 
அப்பாவுக்கு போன் போட்டு நடந்ததைச் சொன்னேன்... எங்க அம்மா அதைக் கேட்டுவிட்டு "அய்யயோ பையன ஒழுங்கா கூட பாக்கலைங்க" என்று கத்தியதும், எனக்கு குரல் உடைந்துவிட்டது.... "சார், இங்க பாத்ரூம் எங்க இருக்கு" என்று யாரையோ கேட்டேன்... கடைசி இரண்டு வார்த்தைகள் அழுதுகொண்டே தான் கேட்டேன்.....

போனிலேயே அழுது, பேசி, முத்தமிட்டு சமாதானம் ஆன பிறகு ஒரு தெளிவு வந்தது..... தேயிலைத் தோட்டங்களைப் பார்த்துக்கொண்டே ஹில்வியூ காட்டேஜ் லானில் அமர்ந்து ஸ்ட்ராங் காபி குடிப்பதைப் போல....

வெளியே வந்து பார்த்தால் பலவிதமான பயணிகள், விமான நிலையத்தின் வழக்கமான அதிசயங்கள்... அழகான பெண்கள்... எதிலும் ஆர்வமில்லாமலிருந்தது...

விமானம் ஏறி, ஜன்னலோரம் அமர்ந்து, டேக்ஆபில் சிலிர்த்து, சிறகில்லாமல் பறந்து, காதடைத்து, போட்டோ எடுத்து, ஸ்வீட்டி ரதோரிடம் காபியும் முந்திரியும் வாங்கி சுவைத்த பின்பு கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது.....

பயணம் முடிந்து அகமதாபாத் சென்று குஜராத்தி பெண்களைப் பார்த்த பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது...... ஏரோப்ளான்னா சும்மாவா??

Wednesday, November 6, 2013

ஒயினும் நானும்

குட்டைப் பாவாடைப் போடும் அழகான பெண்கள்,
அநாயசமாக ட்ரம்மும் கிட்டாரும் வாசிக்கும் பசங்க, 
புதன்கிழமைதோரும் கிடைக்கும் 2 ப்ரீ பீரியட்கள் (மாஸ்)
ஆங்கிலப் பாடல்களை தடையில்லாமல் பாடுவது,
ஜிப் வைத்த பைபிள், 
"சிஸ்டர்"களின், "மிஸ்"களின் செல்லப் பிள்ளையாதல்,
கிருஸ்துமஸுக்கு முதல் நாள் பிறந்தது,
என்று பல விஷயங்கள் இருந்தாலும் எப்படியாவது நாமளும் கிறிஸ்டியனாகிடனும் என்று ஏங்கியது அந்த வொயினில் முக்கிய அப்பத்துக்காகத்தான்......

அதிலும் ஒவ்வொரு முறையும் எல்லாருக்கும் கொடுத்தது போக மீதி இருக்கும் ஒயினை, யாருக்கும் காட்டாமல் பாதிரி மறைத்துக் குடிக்கும்பொழுது அப்பவே போய் ஞானஸ்தானம் வாங்கிடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்......

எப்பவுமே மறைத்து வைக்கும் பொருளுக்குத்தானே கவர்ச்சி அதிகம்...

அப்பத்தை வாங்கியதும் வாயைத் திறக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாய் அதன் சுவையை ரசிக்கும்போது, ஒரு வேளைத் தேனை விட ருசியாய் இருக்குமோ என்று நினைக்கத் தூண்டியவர்கள் என் கிருத்துவ நண்பர்கள்....

"ஒயின்ஷாப்" என்ற போர்டைப் பார்க்கும்போதெல்லாம் சரக்கில் ஒயினையேப் பிரதானமாக எண்ணியதும் உண்டு...

இவ்வளவு பெருமை வாய்ந்ததாய்க் கருதிய ஒயினை பண்ணிரண்டாவது படிக்கும்போது ருசித்துப் பார்த்தபோது முதல் க்ரஷை விட மோசமாய் ஏமாற்றமடைந்தேன்...

அப்பதான் முதன்முதலாய் நேரில் ஒயினைப் பார்க்கிறேன்...
தேனில் தண்ணீரைக் கலந்தது போல லேசான நுரையுடன் ஒரு திரவம்,
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு எல்லாம் கலந்தது போன்ற ஒரு சுவை.... புரிபடாத ஒரு வாசனை என்று மோசமானதொரு அனுபவம்.... பாதி க்ளாஸ் கூடக் குடிக்கவில்லை....
இதுக்காக மதம் மாறி இருந்தா அநியாயமா அண்ணாமலையாரை விட்டிருப்பேன்.....

பல ஊர்கள் சுற்றி விலை உயர்ந்த ஒயின்களெல்லாம் பார்த்தும் கூட ஒயின் என்பது ஒரு ஒவ்வாத பானமாகவே இன்றும் எனக்கு இருந்து வருகிறது....

இத நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா, "ஆளு செம டைப்புங்க" என்று நினைத்திருக்கும் பல பேரு ரொம்பக் கேவலமானதொரு உண்மை முகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.... இது கம்பெனிகளுக்கும் பொருந்தும்..... அவைகளின் ஒரிஜினல் HENCE PROVED என்பதாகவே இருக்கிறது....

கூடிய விரைவில் அடுத்த லார்ஜை ஆர்டர் செய்ய வேண்டும் போலிருக்கிறது.... பார்க்கலாம்.... அதுவாவது ஒரு கோனியாக்காக அமையுமா இல்லை மறுபடியும் ஒரு ஒயினா என்று.....