Friday, November 8, 2013

ஏரோப்ளான்

என்னை அழவைத்துப் பார்த்த அனைத்தும், என் மனதுக்கு மிக நெருக்கமான பிடித்தமான ஒன்றாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.... அம்மா, அப்பா, அண்ணாமலையார், ஸ்கூல்,  நட்பு, அரியர், பியர், வேலை என்ற வரிசையில் விமானத்துக்கும் இடமிருக்கிறது....

கிராமத்தில் துவையல், ஊறுகாய், குழம்பு என்று பழகிய பையனை மொத நாள் காலேஜ் மெஸ்ஸுல உக்கார வச்சு சட்னி வேணுமா சாம்பார் வேணுமான்னு கேக்கற மாதிரி இருந்தது எனக்கு..... இடம்: சென்னை உள்நாட்டு (நல்லவேளை ) விமான நிலையம், எனது முதல் விமானப் பயணம்.....

எங்க அப்பா அம்மாகிட்ட "நீங்க சுத்தி அந்த பக்கமா வாங்க, நான் இந்த பக்கமா செக்கின் பண்ணிட்டு வந்து உங்கள பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற நான், போர்டிங் முடிஞ்சு உள்ளே சென்றுவிட்டதுதான் காரணம். 
அங்க இருந்த ஒரு புத்தகக் கடை சேல்ஸ் கேர்ள் கிட்ட இங்க விசிட்டர்ஸ் லௌஞ்ச்க்கு எப்படி போகனும் என்று கேட்டதுக்கு, "சார் நீங்க போர்டிங் ஆகி உள்ள வந்துட்டீங்க. இனிமே வெளிய போக முடியாது" ன்னு சொல்லிச்சு. 
செக்கின் எது போர்டிங் எதுன்னே தெரியாம டாமி கூலர்ஸ், காதுல ஐ பாட் வேற....

போனா 3 மாசம் கழிச்சுதான் திரும்ப வர முடியும் என்கிற நிலைமையில், முதல் நாள் ஸ்கூலுக்கு குழந்தையை அனுப்பிட்டு காத்திருக்கும் மனநிலையில் வெளியே அம்மா..... 
அப்பாவுக்கு போன் போட்டு நடந்ததைச் சொன்னேன்... எங்க அம்மா அதைக் கேட்டுவிட்டு "அய்யயோ பையன ஒழுங்கா கூட பாக்கலைங்க" என்று கத்தியதும், எனக்கு குரல் உடைந்துவிட்டது.... "சார், இங்க பாத்ரூம் எங்க இருக்கு" என்று யாரையோ கேட்டேன்... கடைசி இரண்டு வார்த்தைகள் அழுதுகொண்டே தான் கேட்டேன்.....

போனிலேயே அழுது, பேசி, முத்தமிட்டு சமாதானம் ஆன பிறகு ஒரு தெளிவு வந்தது..... தேயிலைத் தோட்டங்களைப் பார்த்துக்கொண்டே ஹில்வியூ காட்டேஜ் லானில் அமர்ந்து ஸ்ட்ராங் காபி குடிப்பதைப் போல....

வெளியே வந்து பார்த்தால் பலவிதமான பயணிகள், விமான நிலையத்தின் வழக்கமான அதிசயங்கள்... அழகான பெண்கள்... எதிலும் ஆர்வமில்லாமலிருந்தது...

விமானம் ஏறி, ஜன்னலோரம் அமர்ந்து, டேக்ஆபில் சிலிர்த்து, சிறகில்லாமல் பறந்து, காதடைத்து, போட்டோ எடுத்து, ஸ்வீட்டி ரதோரிடம் காபியும் முந்திரியும் வாங்கி சுவைத்த பின்பு கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது.....

பயணம் முடிந்து அகமதாபாத் சென்று குஜராத்தி பெண்களைப் பார்த்த பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது...... ஏரோப்ளான்னா சும்மாவா??

Wednesday, November 6, 2013

ஒயினும் நானும்

குட்டைப் பாவாடைப் போடும் அழகான பெண்கள்,
அநாயசமாக ட்ரம்மும் கிட்டாரும் வாசிக்கும் பசங்க, 
புதன்கிழமைதோரும் கிடைக்கும் 2 ப்ரீ பீரியட்கள் (மாஸ்)
ஆங்கிலப் பாடல்களை தடையில்லாமல் பாடுவது,
ஜிப் வைத்த பைபிள், 
"சிஸ்டர்"களின், "மிஸ்"களின் செல்லப் பிள்ளையாதல்,
கிருஸ்துமஸுக்கு முதல் நாள் பிறந்தது,
என்று பல விஷயங்கள் இருந்தாலும் எப்படியாவது நாமளும் கிறிஸ்டியனாகிடனும் என்று ஏங்கியது அந்த வொயினில் முக்கிய அப்பத்துக்காகத்தான்......

அதிலும் ஒவ்வொரு முறையும் எல்லாருக்கும் கொடுத்தது போக மீதி இருக்கும் ஒயினை, யாருக்கும் காட்டாமல் பாதிரி மறைத்துக் குடிக்கும்பொழுது அப்பவே போய் ஞானஸ்தானம் வாங்கிடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்......

எப்பவுமே மறைத்து வைக்கும் பொருளுக்குத்தானே கவர்ச்சி அதிகம்...

அப்பத்தை வாங்கியதும் வாயைத் திறக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாய் அதன் சுவையை ரசிக்கும்போது, ஒரு வேளைத் தேனை விட ருசியாய் இருக்குமோ என்று நினைக்கத் தூண்டியவர்கள் என் கிருத்துவ நண்பர்கள்....

"ஒயின்ஷாப்" என்ற போர்டைப் பார்க்கும்போதெல்லாம் சரக்கில் ஒயினையேப் பிரதானமாக எண்ணியதும் உண்டு...

இவ்வளவு பெருமை வாய்ந்ததாய்க் கருதிய ஒயினை பண்ணிரண்டாவது படிக்கும்போது ருசித்துப் பார்த்தபோது முதல் க்ரஷை விட மோசமாய் ஏமாற்றமடைந்தேன்...

அப்பதான் முதன்முதலாய் நேரில் ஒயினைப் பார்க்கிறேன்...
தேனில் தண்ணீரைக் கலந்தது போல லேசான நுரையுடன் ஒரு திரவம்,
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு எல்லாம் கலந்தது போன்ற ஒரு சுவை.... புரிபடாத ஒரு வாசனை என்று மோசமானதொரு அனுபவம்.... பாதி க்ளாஸ் கூடக் குடிக்கவில்லை....
இதுக்காக மதம் மாறி இருந்தா அநியாயமா அண்ணாமலையாரை விட்டிருப்பேன்.....

பல ஊர்கள் சுற்றி விலை உயர்ந்த ஒயின்களெல்லாம் பார்த்தும் கூட ஒயின் என்பது ஒரு ஒவ்வாத பானமாகவே இன்றும் எனக்கு இருந்து வருகிறது....

இத நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா, "ஆளு செம டைப்புங்க" என்று நினைத்திருக்கும் பல பேரு ரொம்பக் கேவலமானதொரு உண்மை முகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.... இது கம்பெனிகளுக்கும் பொருந்தும்..... அவைகளின் ஒரிஜினல் HENCE PROVED என்பதாகவே இருக்கிறது....

கூடிய விரைவில் அடுத்த லார்ஜை ஆர்டர் செய்ய வேண்டும் போலிருக்கிறது.... பார்க்கலாம்.... அதுவாவது ஒரு கோனியாக்காக அமையுமா இல்லை மறுபடியும் ஒரு ஒயினா என்று.....