Wednesday, November 6, 2013

ஒயினும் நானும்

குட்டைப் பாவாடைப் போடும் அழகான பெண்கள்,
அநாயசமாக ட்ரம்மும் கிட்டாரும் வாசிக்கும் பசங்க, 
புதன்கிழமைதோரும் கிடைக்கும் 2 ப்ரீ பீரியட்கள் (மாஸ்)
ஆங்கிலப் பாடல்களை தடையில்லாமல் பாடுவது,
ஜிப் வைத்த பைபிள், 
"சிஸ்டர்"களின், "மிஸ்"களின் செல்லப் பிள்ளையாதல்,
கிருஸ்துமஸுக்கு முதல் நாள் பிறந்தது,
என்று பல விஷயங்கள் இருந்தாலும் எப்படியாவது நாமளும் கிறிஸ்டியனாகிடனும் என்று ஏங்கியது அந்த வொயினில் முக்கிய அப்பத்துக்காகத்தான்......

அதிலும் ஒவ்வொரு முறையும் எல்லாருக்கும் கொடுத்தது போக மீதி இருக்கும் ஒயினை, யாருக்கும் காட்டாமல் பாதிரி மறைத்துக் குடிக்கும்பொழுது அப்பவே போய் ஞானஸ்தானம் வாங்கிடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்......

எப்பவுமே மறைத்து வைக்கும் பொருளுக்குத்தானே கவர்ச்சி அதிகம்...

அப்பத்தை வாங்கியதும் வாயைத் திறக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாய் அதன் சுவையை ரசிக்கும்போது, ஒரு வேளைத் தேனை விட ருசியாய் இருக்குமோ என்று நினைக்கத் தூண்டியவர்கள் என் கிருத்துவ நண்பர்கள்....

"ஒயின்ஷாப்" என்ற போர்டைப் பார்க்கும்போதெல்லாம் சரக்கில் ஒயினையேப் பிரதானமாக எண்ணியதும் உண்டு...

இவ்வளவு பெருமை வாய்ந்ததாய்க் கருதிய ஒயினை பண்ணிரண்டாவது படிக்கும்போது ருசித்துப் பார்த்தபோது முதல் க்ரஷை விட மோசமாய் ஏமாற்றமடைந்தேன்...

அப்பதான் முதன்முதலாய் நேரில் ஒயினைப் பார்க்கிறேன்...
தேனில் தண்ணீரைக் கலந்தது போல லேசான நுரையுடன் ஒரு திரவம்,
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு எல்லாம் கலந்தது போன்ற ஒரு சுவை.... புரிபடாத ஒரு வாசனை என்று மோசமானதொரு அனுபவம்.... பாதி க்ளாஸ் கூடக் குடிக்கவில்லை....
இதுக்காக மதம் மாறி இருந்தா அநியாயமா அண்ணாமலையாரை விட்டிருப்பேன்.....

பல ஊர்கள் சுற்றி விலை உயர்ந்த ஒயின்களெல்லாம் பார்த்தும் கூட ஒயின் என்பது ஒரு ஒவ்வாத பானமாகவே இன்றும் எனக்கு இருந்து வருகிறது....

இத நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா, "ஆளு செம டைப்புங்க" என்று நினைத்திருக்கும் பல பேரு ரொம்பக் கேவலமானதொரு உண்மை முகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.... இது கம்பெனிகளுக்கும் பொருந்தும்..... அவைகளின் ஒரிஜினல் HENCE PROVED என்பதாகவே இருக்கிறது....

கூடிய விரைவில் அடுத்த லார்ஜை ஆர்டர் செய்ய வேண்டும் போலிருக்கிறது.... பார்க்கலாம்.... அதுவாவது ஒரு கோனியாக்காக அமையுமா இல்லை மறுபடியும் ஒரு ஒயினா என்று.....

No comments: